Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

முரசு



வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.

வேத மறிந்தவன் பாப்பான்,-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்,
நீதி நிலைதவ றாமல்-தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.

ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்
யாவரும் ஓர்குலம் அன்றோ!
மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.

சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்
பெதைமை யற்றிடுங் காணீர்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

நிகரென்று கொட்டு முரசே!-இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

அன்பென்று கொட்டு முரசே-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம்,-இங்கு
சேர்ந்த உணவெலை யில்லை.

வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு
தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம்,-நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?

தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்
தானடி மைகொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்
பற்றுஞ் சதோதரத் தன்மை,
யாருக்கும் தீமைசெய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மகாகவியின் முரசுப் பாட்டில் மிக மிக பிடித்தமான வரிகள் இவைதான்
    "தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
    சாதி வகுப்பினை யெல்லாம்"
    . மிக்க நன்றி நண்பரே ....P.Sermuga Pandian

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...