கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!
சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!
நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!
நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!
மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!
செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!
பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!
சனி, 13 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!