Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 5 நவம்பர், 2009

பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டை ..!

பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் வேண்டுமா..?ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!

நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார்

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே!-நீ
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே (ஏட்டில்)
நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே-நம் (நாட்டின்)
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!

சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத்
தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம்
சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின்
அதிகார உலகமடா
புதிரான உலகமடா - உண்மைக்கு
எதிரான உலகமடா - இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வின்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
முறையோடு உழைத்துண்ண
முடியாத சோம்பேறி
நரிபோலத் திரிவார் புவிமேலே - நல்ல
வழியோடு போகின்ற
வாய்பேசா உயிர்களை
வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே (இரை)
காலொடிந்த ஆட்டுகாகக்
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல்போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க - ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க (இரை)

தர்மமென்பார் நீதி என்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச்
சந்தியிலே எறிந்துவிட்டுச்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார்
பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார் - இந்தத்
திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

ஒரு குறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே - அப்படி
உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை....
இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
இன்பமாய் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்ணும் - நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்)
நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனத்ததைச் செய்யிறவன் மனுஷன் (இருக்)

ஆடி ஓடி பொருளைத் தேடி......
அவனும் திங்காம பதுக்கி வைப்பான்....
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்

1 கருத்து:

  1. http://suriyodayam.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/

    http://www.pattukkottaiyar.com/site/

    http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html

    http://ootru.com/neer/2009/06/post_182.html

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...