Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 6 ஜனவரி, 2011

மனித வணக்கம் - கமல்ஹாசன் கவிதைகள்

தாயே... என் தாயே!
நான் மீட்ட சோலே!
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீகச் சக்கரவர்த்திசரண்
தகப்பா – ஓ – தகப்பா
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதையாய் இன்று
புரியா வரி இருப்பின் கேள்...
பொழிப்புரை நான் சொல்கிறேன்
தமையா – ஓ – தமையா
என் தகப்பனின்
சாயல் நீர்
அச்சகம் தான் ஒன்றிங்கே –
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய் – ஓ – தமக்காய்
தோழி... தொலைந்தே போனாயே –
துணை தேடிப் போனாயோ...
மனைவி – ஓ – காதலி
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள்
புரியும்வரை.
மகனே – ஓ – மகனே
என் விந்திட்ட விதையே...
செடியே... மரமே... காடே...
மறுபிறப்பே
மரண சௌகர்யமே... வாழ்...
மகளே – ஓ – மகளே...
நீயும் என் காதலியே...
எனதம்மை போல்
எனைப் பிரிந்தும் நீ
இன்பம் காண்பாயோ...
காதலித்த கணவனுக்குள்
எனைத் தேடுவாயோ...
நண்பா – ஓ – நண்பா...
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடம் அவ்விதமே.
பகைவா – ஓ – பகைவா...
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தைக் கேலி செய்வாய்
நீ உடுத்து நிற்கும்
ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்
வாசகா – ஓ – வாசகா...
என் சமகால சகவாசி
வாசி...
புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து...
எனது கவி உனதும்தான்
ஆம்...
நாளை உன்வரியின்
நான் தெரிவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...