Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

புது ஞாயிறு - இறுதிக் கவிதை

செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் - புற
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்.

கொக்கரக்கோ வெனக் கோழியும் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற இருள் சொல்லாமல் μடுது
பத்துத் திசையிலும் ஜன சக்தி முழங்கிடுதே (செக்க)

தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு பாடுது
தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவம் கொண்ட படைபல கூடுது
சிக்கல் அறுத்து பொது நடை போடுது
சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே (செக்க)

கத்தும் பறவை கனிகரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே
ரத்த வேர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே - ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே - மக்கள்
வெற்றி நெருங்கிடுதே (செக்க)


[15-08-1959 ஜனசக்தியில் புது ஞாயிறு என்ற தலைப்பில் வெளிவந்த இந்த
கவிதைதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இறுதிக் கவிதை]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...