Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

நட்பு!

சோற்றுக்(கு) அலைகின்ற
நாயைப் பிடித்ததைச்
சொர்க்கத்தில் வைத்தாலும் - அது
நாற்றமலந் தின்னப்
போகுமென்னுங் கதை
நாமறிவோம் நெஞ்சே! - நன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே!

கூனற் கழுதைக்குச்
சேணங்க ளிட்டதைக்
கோவிலில் வைத்தாலும் - அது
கானம் படிப்பதை
விட்டு விடாதென்று
நாமறிவோம் நெஞ்சே! - நன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே!

சாக்கடைப் பன்றிக்குப்
பூக்கடை வாசத்தின்
சாத்திரம் சொன்னாலும் - அதன்
போக்கிடம் என்பது
சாக்கடை தானென்று
நாமறிவோம் நெஞ்சே! - நன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே!

கள்ளிச் செடிதன்னைத்
தோட்டத்திலே வைத்துக்
கண்களில் காத்தாலும் - அது
முல்லைமலர் ஒன்று
தந்து விடாதென
நாமறிவோம் நெஞ்சே! - நன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே!

கன்ன மிடுகின்ற
கள்வனுக்கு கொஞ்சம்
அன்ன மிடும்போதும் - அவன்
அன்னத்திற்குள் கன்னக்
கோலை மறைப்பதை
நாமறிவோம் நெஞ்சே! - நன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே!

காற்பண மாயினும்
கஷ்டப் படாமலே
கவர்ந்திடும் கள்வனவன் - தினம்
ஊர்ப்பணத் தாலேதன்
உடம்பை வளர்ப்பதை
நாமறிவோம் நெஞ்சே! - நன்னெஞ்சே
நாமறிவோம் நெஞ்சே!

ஏழைக்கும் செல்வர்க்கும்
மேனியில் தொந்தி
எட்டில் ஒருபங்கு - தினம்
ஏய்த்துப் பிழைக்கின்ற
நாய்களுக்கு மட்டும்
நாலில் ஒரு பங்கு! - நன்னெஞ்சே
நாலில் ஒரு பங்கு!

ஈரடி பாய்ந்தவன்
அப்பனென் றால்மகன்
ஏழடி பாய்வானாம்! - அது
யாரடி யாயினும்
காரிய மாயிடச்
சேவடி கொள்வானாம்! - நன்னெஞ்சே
சேவடி கொள்வானாம்!

பனை மரத்துக்கு
தண்ணி ஒருதரம்
பாய்ச்சிவி டால்போதும் - அது
தனைவ ளர்த்துத்தன்
தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்! - நன்னெஞ்சே
தந்து விளையாடும்!

தென்னை மரத்துக்கு
அடிக்கடி கொஞ்சம்
தீர்த்தம் விடவேண்டும்! - அந்தத்
தீர்த்தம் இனிப்பையும்
சேர்த்துக் கொண்டுவரும்
காத்திருக்க வேண்டும்! - நன்னெஞ்சே
காத்திருக்க வேண்டும்!

வாழை மரத்துக்கு
நாளுக்கு நாள்தண்ணி
வார்த்த பின்னாலடியோ - அது
பூவை, பழத்தை
இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ! - நன்னெஞ்சே
போட்ட கடனடியோ!

நண்பரிலே பனை
தென்னை வாழையென்று
நாலுவிதங் களுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும்
நன்மையிலும் இந்த
மூன்றுவகை களுண்டு! - நன்னெஞ்சே
மூன்றுவகை களுண்டு!

நான்கண்ட நண்பர்கள்
மூன்று வகையல்ல
நாலாம் வகையடியோ! - அவர்
வாங்கிக்கொள் வார்ஒரு
நன்றி சொல்லார்! - அது
வாழும் முறையடியோ! - நன்னெஞ்சே
வாழும் முறையடியோ!

இப்படிப் பட்டவர்
நாட்டில் பிறந்தது
என்ன குலமுறையோ? - இவர்
நட்பினில் நான்செய்த
பாவந் தொலைவது
எந்தத் தலைமுறையோ! - நன்னெஞ்சே
எந்தத் தலைமுறையோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...