Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தீவாளியா?

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!
தமிழகத்தின் காலடியில்
வெறும் மனித உரிமையைப் பெறத்
தமிழன் மாண்டு கொண்டிருக்க
உன் முன்னோனை அசுரன் என்று இழிவுபடுத்தி
உன் முன்னோனை வீழ்த்திய நாளை
நீயே கொணடாடும் வேடிக்கை இங்கு தான் நிகழ்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...